தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து, ஆங்காங்கே மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன், குடியிருப்பு பகுதிகளிலும், விளை நிலங்களிலும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக நேற்றும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 100 மி.மீ., கோத்தகிரி, மணப்பாறை 90 மி.மீ., தோகைமலை, அவிநாசி, மணல்மேல் குடி, கலசப்பாக்கம் 70 மி.மீ. மழை பெய்துள்ளது.
இதற்கிடையே தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடற்பகுதியில் 3 கி.மீ. உயரத்துக்கு வானில் வளிமண்டல மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை, நீலகிரி, ஈரோடு, மதுரை, விருதுநகர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் இன்று பெய்யும் என்று தெரிவித்து உள்ளது.