• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

புரட்டாசி மாத சிறப்பு பூஜை.., சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு…

Byகுமார்

Sep 17, 2021

சபரிமலை ஐயப்பன் கோவில் ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, கடந்த ஆகஸ்டு 15ஆம் தேதி திறக்கப்பட்டு, தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 23ஆம் தேதியன்று நடை அடைக்கப்பட்டது. புரட்டாசி மாத பூஜைகளுக்காக 24 நாட்களுக்கு பிறகு கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. ஐயப்பன் கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார்.

அதையடுத்து இன்றுமுதல் வரும் 21ஆம் தேதி வரை, 5 நாட்களுக்கு பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷ பூஜை மற்றும் உச்ச பூஜைக்கு பிறகு, மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தீபாராதனை, அபிஷேகத்துடன், இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். நாள்தோறும் நெய் அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை உட்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும் என்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள், ஆன்லைன் முன்பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், நாளொன்றுக்கு 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்றும், பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்றும் தேவசம் போர்டு தெரிவித்து உள்ளது.