திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில், அரசு உத்தரவையும் மீறி மீண்டும் டாஸ்மாக் கடையைத் திறக்க முயற்சி நடப்பதாகக் கூறி பொதுமக்கள் கடை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் நாகல்நகர் 36-வது வார்டுக்கு உட்பட்ட சேலாங்கேணி தெரு, நகரின் மிக முக்கியப் பகுதியாக விளங்குகிறது. புகழ்பெற்ற திண்டுக்கல் பூட்டு தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், சிறுமலை விவசாயிகள் மற்றும் பழ வியாபாரிகள் என ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரப் பகுதியாக இது உள்ளது. மேலும், திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து நகரின் பிற பகுதிகளுக்குச் செல்லும் முக்கிய ரோடாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு பள்ளிவாசல் மற்றும் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களும், வழிபாட்டுத் தலங்களும் உள்ளன.
இந்நிலையில், சேலாங்கேணி தெருவின் முன்பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையில் மது வாங்குபவர்கள் ரோட்டில் அமர்ந்து மது குடிப்பது, காலி பாட்டில்களை நடுரோட்டிலேயே உடைப்பதுமாக உள்ளது. மது போதையில் அசிங்கமான வார்த்தைகளால் பேசிக் கொண்டு, அரைகுறை ஆடையுடன் நடுரோட்டிலேயே படுத்துக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் முகூர்த்த நாட்களில் இந்தச் ரோட்டில் வாகனங்கள் செல்ல முடிவதில்லை.
மேலும் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் தினமும் அச்சத்தோடு தான் செல்ல வேண்டி உள்ளது. என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அரசு ஆன்மீக தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் 717 கடைகளை மூட ஆணையிடப்பட்டிருந்தது. திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நேற்று முன்தினம் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன.
ஆனால், அரசின் இந்த உத்தரவை மதிக்காமல், நேற்று மீண்டும் அந்த டாஸ்மாக் கடைக்கு மதுபான பாட்டில்கள் கொண்டு வரப்பட்டு, கடையை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன

இதனைத் அறிந்த பாம்பன் ஆசாரி தெரு, கிசுள்வா சந்து, சந்தை ரோடு, அப்பியா சந்து, தேவர் சந்து, நந்தவனம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த கடையை நிரந்தரமாக மூடக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து
சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்து, கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டப்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.




