• Fri. Apr 19th, 2024

நான்கு ஏக்கர் கரும்பு விவசாயம் செய்துள்ளதை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா போடுவார்பட்டி கண்மாயில் ஆக்கிரமிப்பு செய்து சுமார் நான்கு ஏக்கர் கரும்பு விவசாயம் செய்துள்ளதை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து போடுவார்பட்டி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விஏஓ மதுரை நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்து, கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பெற்றுள்ளார். இதனை அமல்படுத்தாமல் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.

மேலும் உசிலம்பட்டி போடுவார்பட்டி கண்மாய் நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமித்தது சாலை அமைக்கப்பட்டுள்ளது. போடுவார்பட்டி கணக்கு நீர்வரத்து கால்வாய்கள் ஒரு சில குறிப்பிட்ட நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து நெல் விவசாயம் செய்து வருகின்றனர். இதனையும் அகற்ற போடுவார்பட்டி கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கால்வாயை ஒரு சில குறிப்பிட்ட நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ளனர். எனவே நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீர் நிரப்ப பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்மாயில் கடந்த சில ஆண்டுகளாக கண்மாய் தூர்வாரப்படாமல் கண்மாய் முழுவதும் கருவேல மரங்கள் வளர்ந்து தண்ணீர் வரத்து இன்றி காணப்படுகிறது. சில ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் இல்லாத காரணத்தால் அப்பகுதியில் உள்ள ஆள்துளை கிணறுகளில் ஆயிரம் அடிக்கு மேல் தண்ணீர் கீழே சென்றுவிட்டது. இதனால் விவசாய நிலங்கள் வறண்டு, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து காணப்படுகிறது.

ஆயிரம் குடியிருப்பு வீடுகளிலும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே போடுவார்பட்டி பொதுமக்கள், ஓய்வுபெற்ற விஏஓ திரு.மாணிக்கம் உள்ளிட்டவர்கள் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் நீரப்ப கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *