• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கோவில் நில ஆக்கிரமிப்பு அகற்றம் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்..,

ByPrabhu Sekar

Jul 28, 2026

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த கஸ்பாபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு கோலாச்சியம்மன் திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இன்று காலை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது பரபரப்பு ஏற்பட்டது.

கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறப்படும் 41 பேருக்கு எதிராக, இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் 78-வது பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்ட நிலையில், வழக்குகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தொடங்கினர்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பலத்த காவல் பாதுகாப்புடன் அதிகாரிகள் நடவடிக்கையை மேற்கொண்டபோது, அங்கு திரண்டிருந்த சில பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த தாம்பரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா மற்றும் அகரம் தென் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் போது, நிலுவையில் உள்ள வரியை செலுத்துவதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும், உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். தொடர்ந்து போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு நிலைமையை கட்டுக்குள் வைத்திருந்தனர்.

இதற்கிடையில், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினரும் மனித வளத்துறை அமைச்சருமான த. சரத்குமார் கோவில் அருகே வந்து, பொதுமக்களைச் சந்திக்காமல் திரும்பிச் சென்றதாக கூறப்படுவதும் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

கோவில் சொத்துகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் முயற்சியும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையும் கஸ்பாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.