• Fri. Apr 18th, 2025

வக்ஃப் திருத்த மசோதாவை கண்டித்து கம்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

வக்ஃப் திருத்த மசோதாவை கண்டித்து தேனி மாவட்டம் கம்பம் நகர முஸ்லிம்கள் ஒன்று கூடி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வக்ஃப் திருத்த மசோதாவை கண்டித்தும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி தலைவர் ஜெயலாபுதீன் அம்பா அவர்கள் தலைமையில் கம்பம் முஸ்லிம்கள் ஒன்று கூடி நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பம் மெயின் ரோட்டில் வடக்கு காவல் நிலையம் அருகே நடைபெற்றது.

ஜமாஅத் தலைவர் ஜெயலாபுதீன் அம்பா வக்ஃப் திருத்த மசோதாவை ஒரு போதும் ஏற்று கொள்ள மாட்டோம் என்று கூறி கண்டன உரையாற்றினார்.
செயலாளர் நாகூர் மீரான் வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்த்த அனைவருக்கும் நன்றி கூறி பேசினார்.
ஜமாஅத்துல் உலமா சபை மாநில துணை தலைவர் அலாவுதீன் மிஸ்பாஹி ஹஜ்ரத், சம்ஸுல் ஆலம் ஹஜ்ரத் ஆகியோர் வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்த்து உரையாற்றினார்கள்.
மசோதாவில் மாற்றங்களைச் செய்வதாகக் கூறி, வக்ஃப் சொத்துகளை அரசு கையகப்படுத்த விரும்புவதாகவும், வேறு எந்த மதத்தின் சொத்து விவகாரங்களிலும் தலையிடாத ஒன்றிய அரசு வக்பு வாரியத்தில் அடாவடித்தனமாக தலையிடுகிறது. வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத நபர்களை நியமிப்பதற்காக சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளனர் என பேசினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உத்தமபாளையம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.