


தமிழ்நாடு சட்டமன்றத்தில், கண்ணகி கோவில் சீரமைப்பு மற்றும் கோவிலுக்கு வழி ஏற்படுத்தி தருவது குறித்து பேசிய கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணனுக்கு வாணிய சமுதாயத்தினர் கோவில் பரிவட்டம் கட்டி நன்றி தெரிவித்தனர்.

தேனிமாவட்டம் கூடலூருக்கு தெற்கே உள்ள விண்ணேற்றிப் பாறை (தற்போது வண்ணாத்திப்பாறை)யில், தமிழக கேரள எல்லைப்பகுதியான, மங்களதேவி மலையில் புலிகள் சரணாலயப்பகுதியில் 4830 அடி உயரத்தில் உள்ளது. கண்ணகி கோவில். மங்களதேவி கண்ணகி அம்மனுக்கு இக்கோவிலை தவிர இந்தியாவில் வேறு எங்கும் கோவில்கள் இல்லை. சேரன் செங்குட்டுவன் கட்டிய இக்கோவில் சிதிலமடைந்ததால், பின்னாளில் சோழப்பேரரசன் முதலாம் இராஜராஜன் தன்ஆட்சிகாலத்தில் (கி.பி. 985-1014) சோழர் கலைப்பாணியில் இக்கோவிலை மீட்டமைத்தான். இப்போது உள்ள தோற்றம் அதுவே. இக்கோயிலில் சீரமைக்க கோரி கண்ணகி அறக்கட்டளையினர், மற்றும் பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

கடந்த 09-04-2025 புதன்கிழமை தமிழ்நாடு சட்டமன்றத்தில்
மங்களதேவி கண்ணகி அம்மன் கோவிலில் புனரமைப்பு பற்றியும், தமிழகம் வழியாக கண்ணகி கோவிலுக்கு செல்லும் தெல்லுக்குடி வனப்பாதையை வாகன பாதையாக மாற்ற வேண்டுமென்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் கம்பம் இராமகிருஷ்ணன் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் சட்டமன்றத்தில் கண்ணகி கோவில் குறித்து கோரிக்கை வைத்த எம்எல்ஏ ராமகிருஷ்ணன் அவர்களை தேனி மாவட்ட வாணியர் சமுதாயப் பெருமக்கள் அவரது வீட்டில் சந்தித்து, கம்பம் அருள்மிகு அன்பிற்பிரியாள் திருக்கோயில் பூசாரி பிரகாஷ் மூலம் அம்மன் துதி பாடி பரிவட்டம் கட்டி கோவில் மரியாதை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட வாணியர் சமுதாயத் தலைவர் சுந்தரவடிவேல் கம்பம் சட்டமன்ற உறுப்பினருக்கு முத்து மாலை அணிவித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தென்னிந்திய வாணியர் சங்கத்தின் மாநில தலைவர் வழக்கறிஞர் C.காந்தி வழங்கிய வாழ்த்து மடல் எம் எல்ஏ இராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக தேனி மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும் இருந்தும் வாணியர் சமுதாய மக்கள் பெரும் திரளாக கம்பம் நகரில் வந்து அங்கிருந்து எம்எல்ஏ வீட்டிற்கு ஊர்வலமாக சென்றனர்.
இந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் மாவட்ட செயலாளர் கனக செட்டியார், மாவட்ட பொருளாளர் சேகர் , தேனி நகர் வாணியர் சங்கத்தின் சார்பாக ராமர், தேனி மாவட்ட வாணியர் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள், பல்வேறு வாணியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் தென்னிந்திய வாணியர் சங்க நிர்வாக குழு உறுப்பினர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

