• Sat. Apr 26th, 2025

உலக அளவில் 5ஆம் இடத்தைப் பெற்ற புரோட்டா

Byவிஷா

Apr 9, 2025

உலகின் தலைசிறந்த நூறு வகையான தெருவோர உணவுகள் பட்டியலில், புரோட்டா 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
புரோட்டா என்பது மைதாமாவால் செய்யப்படும் உணவாகும். இது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், நேபாளம், பர்மா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளில் கிடைக்கும். இதனை இலங்கையில் பராட்டா என்றும், இந்தோனேசியாவில் ப்ராத்தா என்றும் அழைப்பார்கள். 2ஆம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழ்நாட்டில் பரவலாகப் பயன்படத் தொடங்கின. அதில், புரோட்டாவும் பிரபலமடைந்தது.
புரோட்டாவில் பல வகைகள் உள்ளன. புரோட்டா, கொத்து புரோட்டா (முட்டை புரோட்டா), வீச் புரோட்டா, முட்டை வீச் புரோட்டா, முட்டை லாப்பா புரோட்டா, சிக்கன் லாப்பா புரோட்டா, சில்லி புரோட்டா, பன் புரோட்டா உள்ளிட்ட வகைகளில் கிடைக்கிறது. ஆனால், புரோட்டா உடலுக்குத் தீங்கான ஒன்றாகும். இதில் சில வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதால், நீரிழிவு (சர்க்கரை) நோய் வர அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால், இவற்றை சில ஐரோப்பிய நாடுகளும், சீனாவும், இங்கிலாந்தும் தடை செய்திருக்கின்றன. புரோட்டாவின் மூலப்பொருட்கள் சில விதங்களில் உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கக் கூடியது என சில கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் தான், உலகப் புகழ்பெற்ற டேஸ்ட் அட்லஸின் “உலகின் சிறந்த 50 தெரு உணவுகள்” பட்டியலில் புரோட்டா, அமிர்தசரஸ் குல்ச்சா மற்றும் சோலே பத்தூரே ஆகிய 3 புகழ்பெற்ற இந்திய உணவுகள் இடம்பெற்றுள்ளன. உணவு பிரியர்களின் விருப்பமான ஆன்லைன் தளமான டேஸ்ட் அட்லஸ், சமீபத்தில் வெளியிட்டுள்ள தரவரிசையின்படி, தென்னிந்தியாவின் புரோட்டா 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இது மிகவும் பிரபலமான உணவாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து 6-வது இடத்தில் அமிர்தசரஸ் குல்ச்சாவும், 40-வது இடத்தில் டெல்லியின் சோலே பத்தூரேவும் இடம் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் அல்ஜீரியாவின் கேரண்டிடா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது கொண்டைக்கடலை மாவு, எண்ணெய், மசாலா மற்றும் தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
2-வது இடத்தில் சீனாவின் குவோடி உள்ளது. மூன்றாவது இடத்தை இந்தோனேசியாவின் சியோமே பிடித்துள்ளது. இது மீன் சேர்த்து செய்யப்பட்ட ஆவியில் வேகவைத்த அப்பளம் ஆகும். இது பொதுவாக கடலை எண்ணெயுடன் பரிமாறப்படுகிறது.