• Tue. May 21st, 2024

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை அறிவிப்பை திரும்ப பெற மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்

Byவிஷா

Apr 30, 2024

சென்னை போக்குவரத்து போலீஸார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என மருத்துவர்களும், மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வாகனங்களில் ஊடகம், காவல்துறை, நீதித்துறை, வழக்கறிஞர், மருத்துவர் என அங்கீகாரமற்ற வகையில் ஸ்டிக்கர் ஒட்டுவதை கட்டுப்படுத்தும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 198 மற்றும் மத்திய மோட்டார் வாகன சட்டம் விதி 50-ன் கீழ் வரும் மே 2-ம் தேதி முதல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து போலீஸார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளன. வாகனங்களில் ‘டாக்டர்’ ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு அனுமதி அளிக்க கோரி, சென்னை காவல் ஆணையருக்கு ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கமாநிலத் தலைவர் மருத்துவர் பி.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது..,
மருத்துவர்கள் பணி மனித உயிரை காப்பாற்றும் ஒரு இன்றியமையாத பணி ஆகும். அவசர காலங்களில் மருத்துவ சிகிச்சைக்காக செல்லும் மருத்துவர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரிப்பதால் தேவையற்ற காலதாமதம் ஏற்படும்.
இதனால், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. சந்தேகப்படும் மருத்துவர்களை ஐடி கார்டை காட்ட சொல்லலாம். அனைத்து மருத்துவர்களையும் டாக்டர் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்பது மருத்துவர்களை அவமரியாதை செய்வதாகவும், உயிர் காக்கும் உன்னத பணியை தடுப்பதாகவும், மக்கள் உயிருடன் விளையாடுவதாகவும் மருத்துவர்கள் கருதுகிறார்கள். அதனால், அந்த சுற்றறிக்கையை உடனடியாக திருத்தம் செய்து, டாக்டர் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு விலக்களித்து, புதிய சுற்றறிக்கையை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *