இந்தோனேசியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக்கை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.
ஜி-20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நாளையும் (15ம் தேதி), நாளை மறுநாளும் (16ம் தேதி) இந்தோனேசியாவின் பாலி நகரில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் இந்தோனேசியாவுக்கு 3 நாள் அரசு முறை பயணமாக செல்கிறார்.
ஜி-20 உச்சி மாநாட்டில் உலக பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், டிஜிட்டல் மாற்றம், உக்ரைன் விவகாரம் மற்றும் அதன் தாக்கம் குறித்து மோடி மற்றும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் முக்கியமாக விவாதிக்க உள்ளனர்.
உலகின் முக்கியமான வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் கூட்ட மைப்பு ஜி-20 ஆகும். இதில் அர்ஜென்டினா, ஆஸ்தி ரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இம் மாநாட்டின் ஒரு பகுதியாக நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை நேரடியாக சந்தித்து பேசுகிறார். இதுதவிர பிரான்ஸ் அதிபரை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.