• Tue. Feb 18th, 2025

காஷ்மீரில் ரூ.2,700 கோடி செலவில் பிரம்மாண்ட சுரங்கப்பாதை: திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ByP.Kavitha Kumar

Jan 13, 2025

காஷ்மீரில் ரூ.2,700 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 12 கி.மீ. நீளமுள்ள பிரம்மாண்ட சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை சோன்மார்க் மலைப்பாதை இணைக்கிறது. இந்த மலைப் பாதையில் காஷ்மீரில் இருந்து லடாக் செல்ல பலமணி நேரமாகும். அதோடு பனிக்காலத்தில் பனிப்பொழிவு, மழைக்காலத்தில் நிலச்சரிவு காரணமாக சோன்மார்க் மலைப்பாதை மூடப்படும்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண காஷ்மீரின் சோன்மார்க் பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கியது. ரூ.2,700 கோடி செலவில் மலையைக் குடைந்து சுமார் 12 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதை பிரம்மாண்டமாக இசட் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வெளியேறும் சுரங்கப்பாதை மற்றும் அணுகுமுறை சாலைகளை உள்ளடக்கியது. கடல் மட்டத்தில் இருந்து 8,650 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து நாட்டுக்கு அா்ப்பணித்தார்.முன்னதாக சுரங்கப்பாதை பற்றிய விவரங்களை அதிகாரிகளுடன் கேட்டறிந்து சுரங்கப்பாதையில் பயணம் மேற்கொண்டார். இந்த விழாவில் முதலமைச்சர் உமர் அப்துல்லா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா ​​உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.