• Sun. Apr 28th, 2024

முதலமைச்சர் ஸ்டாலின் கைகாட்டுபவரே பிரதமர் : அமைச்சர் சக்ரபாணி

Byவிஷா

Mar 27, 2024

வருகிற மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவரே பிரதமர் என கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மக்களவை தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் ஜோதிமணி. இவர் இன்று (மார்ச் 27) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அமைச்சர்கள் சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கரூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் அப்துல்லா எம்.பி ஆகியோருடன் சென்று, கரூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலிடம் ஜோதிமணி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
முன்னதாக, கரூரில் இண்டியா கூட்டணியின் தேர்தல் பணிமனையை திறந்து வைத்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசியது, “கடந்த தேர்தலில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இந்த முறை 40 தொகுதிகளில் இண்டியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்தியில் யாரை பார்த்து கை நீட்டுகிறாரோ அவர் தான் இந்திய நாட்டின் பிரதமர். தமிழகத்தில் கடந்த 34 மாதங்களில் ஏராளமான சாதனை திட்டங்களை தமிழக முதல்வர் செய்துள்ளார். இந்த சாதனைகளை எடுத்துக் கூறி மக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்போம்.
கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மீண்டும் போட்டியிடுகிறார் கடந்த முறை 4.20 லட்சம் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை அதைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். தமிழக முதல்வர் ஏராளமான தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்து உள்ளது.
தமிழகத்தில் இருந்து வரியாக ஒரு ரூபாய் பெறும் மத்திய அரசு தமிழகத்துக்கு வெறும் 28 பைசா மட்டுமே கொடுக்கிறது. ஆனால் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற வட மாநிலங்களுக்கு அள்ளி கொடுக்கும் மத்திய அரசு தமிழகத்துக்கு கிள்ளிக்கூட கொடுப்பதில்லை.
தமிழக முதல்வர் மற்றும் மாநில இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல எழுச்சி உள்ளது. 40 தொகுதிகளையும் இண்டியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.” என்று தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று கரூர் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கடந்த தேர்தலில் கொடுத்த 521 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக முதல்வர் கூறுகிறார். அதற்கு வெள்ளை அறிக்கை விடுவரா” என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்து பிரச்சாரத்தில் பேசிய அமைச்சர் சக்கரபாணி தமிழக அரசு நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட்டார்
அதில், “கரோனா காலத்தில் அனைத்து மக்களுக்கும் முதல்வர் 4000 ரூபாய் வழங்கினார். பெண்களுக்கான விடியல் பயணம் திட்டத்தில் 445 கோடி பயணம் நடந்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 1 கோடியே 15 லட்சம் பேர்கள் பயனடைந்துள்ளனர். தமிழத்தில் 31 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் 17 லட்சம் பேர்கள் பயடைந்துள்ளனர். இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் 2 லட்சம் உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளது. தேர்தலில் சொன்ன திட்டங்களையும், சொல்லாத திட்டங்களையும் தமிழக முதல்வர் மக்களுக்காக செய்துள்ளார்” என்று கூறி பட்டியலிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *