கர்நாடகா மாநிலத்தில் பாஜக வேட்பாளர் ஒருவரிடம் ரூ.4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கப்பள்ளாப்பூரில் பாஜக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சுதாகர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரி முனிஷ் மவுத்கிலுக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் சுதாகரின் பண்ணை வீட்டில் சோதனை நடத்திய போது, ரூ.4.8 கோடி ரொக்கம் சிக்கியது. மேலும் சுதாகர் மீது மதநாயக்கஹள்ளி போலீஸார் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி முனிஷ் மவுத்கில் தெரிவித்தார்.
இதனிடையே பெங்களூரு தெற்கு தொகுதியின் பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் வாக்காளர்களிடம் வாக்கு கேட்கும் விதமாக வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ மத ரீதியாக தூண்டிவிட்டு, வாக்குகளை அறுவடை செய்யும் விதமாக இருப்பதாக காங்கிரஸ் வேட்பாளர் சவும்யா ரெட்டி புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் தேர்தல் ஆணையம் தேஜஸ்வி சூர்யா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் அந்த சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்குமாறு உத்தரவிட்டுள்ளது.