மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர் கோடிக்கணக்கில் சொத்து வைத்திருப்பது அனைவருக்கும் தலைசுற்ற வைத்திருக்கிறது.
இரண்டாம் கட்ட தேர்தல் நாளான நேற்று 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 88 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 1,202 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2-ம் கட்ட தேர்தலில், கேரளாவின் 20 தொகுதிகளுக்கும், கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவில் தலா 8, மத்திய பிரதேசம் 6, அசாம் மற்றும் பிஹார் தலா 5, மேற்கு வங்கம் மற்றும் சத்தீஸ்கர் தலா 3, ஜம்மு-காஷ்மீர், மணிப்பூர், திரிபுரா மாநிலங்களில் தலா 1 தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த தேர்தலில், கோடீஸ்வரர்கள் முதல் ஏழைகள் வரை களம் இறங்கிய வேட்பாளர்களின் விவரம்:
- கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் எச்.டி. குமாரசாமியை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வெங்கடரமணா கவுடாவுக்கு ரூ.622 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கர்நாடக காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ் ரூ.593 கோடியுடன் பணக்கார வேட்பாளர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். இவர், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் தம்பியாவார். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இவரது சொத்து மதிப்பு 75 சதவீதம் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.
- உ.பி. மதுரா மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பாஜக எம்பி ஹேம மாலினி ரூ.278 கோடி சொத்துகளுடன் மூன்றாமிடத்தில் உள்ளார்.
- மத்திய பிரதேச காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சய் ஷர்மா ரூ.232 கோடி சொத்துகளுடன் நான்காவது இடத்திலும், கர்நாடக முன்னாள் முதல்வர் எச்டி குமாராசாமி ரூ.217.21 கோடியுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
- மகாராஷ்டிராவின் நான்டெட் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் லட்சுமண் நாகோராவ் பாட்டீல் என்பவர்தான் மிக குறைந்த அளவு சொத்துகளை உடையவர். அவர் தன்னிடம் ஒரேயொரு 500 ரூபாய் நோட்டு சொத்தாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
- கேரளாவின் காசர்கோட்டைச் சேர்ந்த ராஜேஸ்வரி தம்மிடம் ரூ.1,000 மதிப்புள்ள சொத்து இருப்பதாக அறிவித்துள்ளார்.
- மகாராஷ்டிராவின் அமராவதி (எஸ்சி) தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் பிருத்விசாம்ரத் முகிந்தராவ் திப்வன்ஷிடம் ரூ.1,400, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் போட்டியிடும் தலித்கிராந்தி தள தலைவர் ஷானாஸ் பானோவிடம் ரூ.2,000 மட்டுமே சொத்துகளாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கேரளாவின் கோட்டயத்தில் போட்டியிடும் வி.பி. கொச்சுமோன் தன்னிடம் ரூ.2,230 மதிப்புள்ள சொத்துகள் மட்டுமே இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் கூறியுள்ளார்.