• Sat. Apr 20th, 2024

குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

ByA.Tamilselvan

Apr 20, 2022

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
. கடந்த 102 ஆண்டுகளாக அமலில் இருந்த இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்து பாஜக அரசு வரையறுத்தது. கடந்த மார்ச் இறுதியில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்தது.
எதிர்க்கட்சிகளின் கடும் ஆட்சேபத்தை மீறி மக்களவையில் கடந்த 4-ம் தேதியும், மாநிலங்களவையில் கடந்த 6-ம் தேதியும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
சாதரண வழக்கில் கைதானாலும் அவரிடம் இருந்து கை, கால் விரல் ரேகைகள் உள்ளிட்ட உயிரியல் மாதிரிகளை சேகரிக்க முடியும். அதாவது ரத்தம், தலைமுடி, சளி, எச்சில் உள்ளிட்ட மாதிரிகளை சேகரிக்கலாம்.
மேலும் குற்றவாளியின் புகைப்படம், கருவிழி, கையெழுத்து, பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவையும் பதிவு செய்யப்படும். இதற்கான முழு அதிகாரம் காவல்துறைக்கு வழங்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட விவரங்கள் தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் 75 ஆண்டுகள் வரை மின்னணு வடிவத்தில் பாதுகாக்கப்படும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை செய்தவர்கள், 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்களின் உடல் பாகங்கள், உயிரியல் அடையாளங்களை வலுக்கட்டாயமாக பெற புதிய சட்டம் வகை செய்கிறது. தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்தும் உயிரியல் மாதிரிகளை சேகரிக்க முடியும். மேலும் நீதிபதியின் உத்தரவின்பேரில் கைது செய்யப்படாத நபரிடம் இருந்தும் உயிரியல் மாதிரிகளை சேகரிக்கலாம்.
நேற்று முன் தினம் இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து புதிய சட்டம் அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்த சட்டத்தை காவல்துறையினர் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன.
பொதுமக்கள் அனைவரையும் அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கீழ் கொண்டு வரும் என்று சமூக ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், குற்ற சம்பவங்களை தடுக்கவுமே புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை” என்று அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *