• Tue. Mar 25th, 2025

விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் -கஞ்சித் தொட்டி திறக்கும் அபாயம்

ஆண்டிபட்டி அருகே விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம். கோடிகளில் உற்பத்தி பாதிப்பு .கஞ்சித் தொட்டி திறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி . சுப்புலாபுரத்தில் 3000க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு , போனஸ் ,இன்சூரன்ஸ் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . அதேபோல ஜக்கம்பட்டி பகுதியிலும் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போட வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கி உள்ளனர் .
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டு வழங்கப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே கடந்த 2021 ஜனவரி மாதம் போடப்பட்ட ஒப்பந்தம் கடந்த 2022 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்தது . இந்நிலையில் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்படாததால் டி . சுப்புலாபுரம் மற்றும் சக்கம்பட்டியில் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது . போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக கடந்த நான்காம் தேதி டி. சுப்புலாபுரம் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது .


இதையடுத்து நேற்று முன்தினம் மாலை இரண்டாம் முறையாக ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சுந்தரலால் காவல்துறை ஆய்வாளர் ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் முன்னிலையில் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்ளுக்கிடைய பேச்சுவார்த்தை நடைபெற்றது . இதில் அனைத்து கட்சிகளைச் சார்ந்த தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர் . 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சு வார்த்தையின் முடிவில் உடன்பாடு ஏற்படவில்லை . இதனால் இரண்டாம் முறையாக பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது . இதையடுத்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வருகின்ற 8 ஆம் தேதி மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது . தொடர்ந்து நடைபெற்று வரும் ஸ்டிரைக்கின் காரணமாக இப்பகுதி உள்ள ஐந்தாயிரம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கஞ்சித் தொட்டு திறக்கும் அபாயம் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து நெசவாளர்கள் கூறுகையில் வேறு தொழில் எங்களுக்கு தெரியாததால் முதலாளிகள் எங்கள் வயிற்றில் அடித்து வருகின்றனர் ஏற்கனவே கடந்த முறை கூலி ஒப்பந்தத்தை தருவதாக கூறிவிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்காமல் எங்களை வேலை வாங்கினர் அரசு நெசவாளர்களின் வாழ்வாதாரத்திற்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்