தேனி மாவட்டம், தேனி அரசு மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய ஆயுர்வேத சிகிச்சைப்பிரிவு விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
தமிழ்நாட்டில் தேனி மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஓமியோபதி மருத்துவப்பிரிவு தொடங்க அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.6 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைப்பிரிவுக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதற்கான கட்டிட பணிகள் அனைத்தும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த நிலையில், மருத்துவப்பிரிவு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் இருந்தது.
இதற்கிடையே ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைப்பிரிவு கட்டிடத்தை டெல்லி ஆயுர்வேத அமைச்சக இயக்குனர் டாக்டர் ரகு, இந்திய ஓமியோபதி மருத்துவத்தின் இணை இயக்குனர் பார்த்திபன் ஆகியோர் தலைமையிலான மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த கட்டிடத்தில் 3 தளங்கள் உள்ளன. அதில், ஆயுர்வேதம், சித்தா மற்றும் ஓமியோபதி சிகிச்சைக்காக தனித்தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வகையில் 50 படுக்கை வசதியும் செய்யப்பட்டு உள்ளது. கட்டிடத்தை ஆய்வு செய்த மருத்துவ அதிகாரிகள், ஒருங்கிணைந்த ஆயுர்வேத சிகிச்சைப்பிரிவை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், இந்த ஆய்வு அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்து, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த ஆயுர்வேத சிகிச்சைப்பிரிவு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்றனர். இந்த ஆய்வின்போது மதுரை, தேனி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாரியப்பன் மற்றும் டாக்டர்கள் உடனிருந்தனர்.