



நியூசிலாந்தில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.
நியூசிலாந்து நாட்டின் கீழ் தெற்கு தீவில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு தீவில் கடலுக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக கூறிய தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் பின்னர் அதனை மறுத்தது. இதன்பின் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது என்று அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து 10 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தட்டுகளுக்கு இடையேயான அதிக ஒருங்கிணைப்பு விகிதங்கள் காரணமாக, ஆஸ்திரேலிய தட்டின் கிழக்கு விளிம்பு உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த பகுதிகளில் ஒன்று என அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், திடீரென வீடுகள் குலுங்கியதாகவும், வீட்டில் உள்ள பொருட்கள் அதிர்ந்தன என்றும், இதனால் அச்சமடைந்து வீட்டைவிட்டு வெளியேறியதாகவும் கூறினர். நியூசிலாந்தின் தெற்கு தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர்.

