

தமிழ்நாடு முழுவதும் நேற்றும மாலையிலிருந்து பல்வேறு இடங்களில் தொடர்ந்து மின்வெட்டு புகார்கள் வந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி மத்திய தொகுப்பிலிருந்து தென் மாநிலங்களுக்கு மின்சாரம் தடைபட்டதாக விளக்கமளித்துள்ளார்.
மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் நேற்று மாலை முதல் மின் தடை ஏற்பட்டது. மதுரை திருமங்கலம் பகுதியில்இரவு 7 மணியிலிருந்து 9.15 வரை மின்சாரம் இல்லை.கோடை வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கியிருக்கும் நிலையில் வெக்கையிலும் புழுக்கத்திலும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இது தொடர்பாக மின்வாரியத்துக்கும் புகார்கள் குவிந்தன.
முன்பு ஒருமுறை மின்வெட்டுக்கு அணில்களை காரணமாக சொன்னார் அமைச்சர் . அதை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களிலும் பலர் அரசை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில் திடீர் மின் தடை குறித்து தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேஸ்புக்கில் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது.
இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது மின்சார வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நகர்புறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.” எனக் கூறியுள்ளார்.
இந்த மின்வெட்டு தற்காலிகமானதா அல்லது இனி இப்படித்தான் இருக்குமா என்பது தெரியவில்லை.
