கள்ளக்குறச்சி பள்ளி மாணவியின் உடல் இன்று மறு பிரேத பரிசோதனை செய்யப்படுவதாக தகவல்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 13-ந் தேதி ஸ்ரீமதி விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை பெற்றோர் ஏற்கவில்லை .தங்களது மகளின் சாவில் மர்மம் உள்ளது என கூறி உறவினர் போராட்டம் நடத்தினர்.போராட்டம் வன்முறையாக வெடித்தது.
மாணவியின் தந்தை ராமலிங்கம் தனது மகள் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய டாக்டர்கள் குழு அமைத்து உத்தரவிட்டார். மாணவியின் உடல் மறுபிரேத பரிசோதனை இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரி முன்பு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.