• Thu. Mar 28th, 2024

பொங்கல் பரிசு தொகுப்பு…
பணமாக வழங்க தமிழக அரசு முடிவு..?

2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்காமல், பணமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.
2022ம் ஆண்டு சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்த இந்த திட்டத்தை அனைத்து நியாயவிலைக் கடைகளின் வாயிலாக, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயல்படுத்தியது.
அதன்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு பச்சரிசி- 1 கிலோ, வெல்லம்- 1 கிலோ, முந்திரி- 50 கிராம், திராட்சை- 50 கிராம், ஏலக்காய்- 10 கிராம், பாசி பருப்பு- 500 கிராம், ஆவின் நெய் – 100 கிராம், மஞ்சள் தூள் – 100 கிராம், மிளகாய் தூள் – 100 கிராம், மல்லி தூள் – 100 கிராம் ஆகியவை வழங்கப்பட்டது.
மேலும், இவற்றுடன் கடுகு – 100 கிராம், சீரகம்- 100 கிராம், மிளகு – 50 கிராம், புளி- 200 கிராம், கடலைப் பருப்பு- 250 கிராம், உளுத்தம் பருப்பு- 500 கிராம், ரவை- 1, கோதுமை – 1 கிலோ, உப்பு – 500 கிராம், துணி பை ஒன்று மற்றும் கரும்பு வழங்கப்பட்டது. ஆனால் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் அதிக குளறுபடி நடந்ததாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்தனர்.
இதுமட்டுமல்லாமல் வெல்லம் உருகிய நிலையில் இருந்ததாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் 2023ம் ஆண்டு பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதனால் அடுத்த ஆண்டு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் எந்தவித குளறுபடிகளும் நடக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அடுத்த ஆண்டு எந்த பரிசு பொருளும் தராமல் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் ரூ.1000 பணம் தர முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில், இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. திடீரென பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்காமல் ரொக்கமாக கொடுக்க முடிவு செய்யப்பட்டதற்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட குளறுபடிகளே காரணமாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *