• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் -முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

ByA.Tamilselvan

Jan 9, 2023

பொங்கல் திருநாளை முன்னிட்டு பரிசு தொகுப்பு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு வழங்கினார்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், 2 கோடியே 19 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவற்றுடன் ரூ.1,000 ரொக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால், பொங்கல் பரிசுடன் முழு கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினரும், கரும்பு விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து, 6 அடி நீளம் கொண்ட முழு கரும்பும் பொங்கல் பரிசுடன் கூடுதலாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று காலை தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்துக்கு அருகே போர் நினைவுச்சின்னம் எதிரே உள்ள அன்னை சத்யா நகர் ரேஷன் கடையில் இந்த திட்டத்தை அவர் தொடங்கிவைத்தார். சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்ததையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தொடங்கியது.