• Sat. Apr 20th, 2024

பொங்கல் பரிசு தொகுப்பு 13ம் தேதி
வரை வழங்கப்படும்: அமைச்சர்

பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 13ம் தேதி வரை வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், முழுகரும்பு ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் சென்னை, கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்பு கிடங்கில் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று ஆய்வு மேற்கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வினியோகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 73 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான டோக்கன்கள் நேற்று முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை வருகிற 9ம் தேதி தொடங்கிவைக்கிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரையிலான 4 நாட்களில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ரேஷன் கடைகளில் எவ்வளவு ரேஷன் கார்டுகள் இருக்கிறது என்பதை பொறுத்து, ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு வழங்கலாம் என்பது முடிவு செய்யப்படும்.
பொங்கல் பரிசு தொகுப்பை 12ம் தேதிக்குள் பெற முடியாதவர்கள் மற்றும் வெளியூரில் வசிப்பவர்கள் மற்றும் விடுபட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு 13ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இலங்கை மறுவாழ்வு தமிழர்கள் 19 ஆயிரத்து 269 பேருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *