இராமேஸ்வரம் அருகே உள்ள கச்சத்தீவை மீட்க சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா நாட உள்ளதாக தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்த சமூகச் செயல்பாட்டாளரும் வழக்கறிஞருமான டாக்டர் வேதா தெரிவித்துள்ளார்.
தேனியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

மூன்றாம் நூற்றாண்டு சோழர் கால வரைபடங்களிலேயே கச்சத்தீவு இந்தியாவிற்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் போர்ச்சுகீசியர் காலத்து வரைபடங்களை அடிப்படையாகக் கொண்டு கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
குஜராத் அருகே உள்ள ரான் ஆஃப் கட்ச் (Rann of Kutch) தொடர்பான நிலப்பரப்பு விவகாரத்தில் இந்தியா முன்வைத்த வரலாற்று ஆவணங்களைப் போலவே, கச்சத்தீவு விவகாரத்திலும் வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து சர்வதேச நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முயற்சி நடைபெறுவதாகக் கூறினார்.

மேலும், 2019-ஆம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சர்வதேச அளவில் முன்வைத்த ஆவணங்களில், இந்தியாவிற்குக் கச்சத்தீவு தேவைப்பட்டால் மீண்டும் பெற்றுக்கொள்ளும் வகையிலான அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதன் காரணமாக தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதுடன், பல்வேறு இன்னல்களையும் சந்தித்து வருவதாகவும், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவை மீட்பது அவசியம் என்றும் தெரிவித்தார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தைப் பெறும் என்றும், அதன் மூலம் இந்தியாவின் சர்வதேச குரல் வலுப்பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், 2029-ஆம் ஆண்டுக்குள் கச்சத்தீவு பிரச்சினைக்கு முடிவு ஏற்பட்டு, கச்சத்தீவு மீண்டும் இந்தியாவிடம் வரும் எனவும் தெரிவித்தார்.

வரும் நவம்பர் 18-ஆம் தேதி வ.உ.சிதம்பரனாரின் 90-வது நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாகவும், நவம்பர் 19-ஆம் தேதி கச்சத்தீவு மீட்பு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறினார்.
இதுவரை கச்சத்தீவை மீட்பதற்கான சர்வதேச சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிலையில், தற்போது அதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் டாக்டர் வேதா தெரிவித்தார்.