• Thu. Nov 5th, 2026

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கண்டன அறிக்கை..,

Byமுகமதி

Nov 5, 2026

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமே!
மாநகராட்சி நிர்வாகமே!
தீபாவளிக்கு மூன்று நாட்களே உள்ள நிலையில் தெருவோரக் கடைகளை அகற்ற உத்தரவிடுவதா?

சிறு, குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும்!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், புதுக்கோட்டையில் தெருவோரக் கடைகளை இன்று மாலை 5 மணிக்குள் அகற்ற வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

சிறு, குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும் இத்தகைய நடவடிக்கை எந்த வகையிலும் நியாயமானதல்ல. சம்பந்தப்பட்ட விவகாரம் நீதிமன்றத்தில் வழக்காக நிலுவையில் இருப்பது மாவட்ட நிர்வாகத்திற்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் தெரியாதா? தெரிந்திருந்தும் ஏன் முன்கூட்டியே உரிய நடவடிக்கை எடுக்கவில்லை?

தீபாவளி பண்டிகையை மட்டுமே நம்பி, வட்டிக்குக் கடன் வாங்கி, தங்களது குடும்பத்தின் வயிற்றுப் பிழைப்புக்காகப் பல ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து வியாபாரம் செய்து வரும் ஏழை, எளிய வியாபாரிகளின் நிலையை நிர்வாகம் சற்றேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

இன்னும் மூன்று நாட்களில் தீபாவளி வரவுள்ள நிலையில், வியாபாரத்திற்காக வாங்கி வைத்திருக்கும் பொருட்களை இன்று கடைகளை அகற்றினால் அவர்கள் எங்கே கொண்டு செல்வார்கள்? முதலீடு செய்த பணத்தை எப்படி மீட்பார்கள்? வட்டிக்குக் கடன் கொடுத்தவர்களுக்கு என்ன பதில் சொல்வார்கள்?

மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய நிர்வாகமே, அவர்களின் வாழ்வாதாரத்தை ஒரே நாளில் முடக்குவது வேதனையளிக்கிறது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் சிறு வியாபாரிகளை மேலும் கடன் சுமைக்குள் தள்ளும் இந்த நடவடிக்கை அவர்களின் குடும்பங்களையும் கடுமையாகப் பாதிக்கும்.

எனவே, மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு, இன்று மாலை 5 மணிக்குள் கடைகளை அகற்ற வேண்டும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும். தீபாவளி பண்டிகை முடியும் வரை வியாபாரிகள் எவ்வித இடையூறும் இல்லாமல் தங்களது வியாபாரத்தைத் தொடர அனுமதிக்க வேண்டும். நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கும் சட்ட விதிமுறைகளுக்கும் உட்பட்டு, வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் தீபாவளிக்குப் பிறகு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், வியாபாரிகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, உரிய கால அவகாசமும் மாற்று ஏற்பாடுகளும் செய்து தர வேண்டும். ஏழை, எளிய வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் அவசர நடவடிக்கைகளைக் கைவிட்டு, மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தையும் மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

ஏழை, எளிய வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற கோரிக்கைகள் முன்வைக்கிறது…
தமிழக வாழ்வுரிமைக் கட்சி புதுக்கோட்டை.