• Thu. Nov 5th, 2026

வனத்துறையின் கெடுபிடிகளைக் கண்டித்து டிசம்பரில் தேனியில் மாபெரும் நடைபயணப் போராட்டம்!

ByAjmalkhan saleemraja

Nov 5, 2026

தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு மலைப்பகுதிகளில் வனத்துறையினரின் கெடுபிடிகளைக் கண்டித்து, டிசம்பர் மாதத்தில் தேனியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் மாபெரும் நடைபயணப் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

மேகமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 98 கிராமங்களை முழுமையாகக் காலி செய்ய முயற்சிப்பதாகக் கூறி வனத்துறையின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பல தலைமுறைகளாக மலைப்பகுதிகளில் வசித்து வரும் விவசாயிகளுக்கு வன உரிமைச் சட்டத்தின்படி உடனடியாக நிலப்பட்டா வழங்க வேண்டும் என்றும், விவசாய நிலங்களுக்கு உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்ட இடுபொருட்களைக் கொண்டு செல்ல வனத்துறையினர் அனுமதி மறுப்பதால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், மின்சார இணைப்பு பெறுதல், பழுதடைந்த வீடுகளைப் பழுதுபார்த்தல், கழிப்பறைகள் கட்டுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கும் வனத்துறையினர் தடை விதிப்பதாகக் குற்றம்சாட்டினர்.

குறிப்பாக, அரசரடி கிராமத்தில் 40 ஆண்டுகள் பழமையான பள்ளிக் கட்டடம் சீரமைக்கப்படாமல் இடியும் நிலையில் உள்ளதாகவும், பள்ளிக் கட்டடத்தைப் புதுப்பிக்க அனுமதி மறுக்கப்படுவதால் மாணவர்கள் திறந்தவெளியில் கல்வி பயிலும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதேபோல், நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சேதமடைந்த சாலைகளைக்கூட சீரமைக்க வனத்துறையினர் அனுமதி மறுப்பதாகக் குற்றம்சாட்டினர்.

இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி. டில்லிபாபு மூலமாக வனத்துறைச் செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் மாவட்ட ஆட்சியரையும் நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரியுள்ள கால அவகாசத்தைப் பயன்படுத்தி, மாநில அரசு உரிய கொள்கை முடிவெடுத்து மலைப்பகுதி மக்களுக்கு விரைவாக நிலப்பட்டா வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், டிசம்பர் மாதத்தில் மலைப்பகுதிகளில் இருந்து புறப்பட்டு தேனி மாவட்டத் தலைமையகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் மாபெரும் நடைபயணப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி. கண்ணன், மாவட்டச் செயலாளர் ஜி.எம். நாகராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.