காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே தைலாபுரம் பகுதியில் அரசு மதுபானக் கடைக்கு அருகில் இயங்கி வந்த பாரைச் சுற்றி ஏற்பட்ட சர்ச்சை, காவல் நிலையம் முன்பு தம்பதியினர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தைலாபுரம் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே கண்ணன் என்பவர் சைட் டிஷ் மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்து வந்தார். இந்தப் பார் உரிமம் இன்றி சட்டவிரோதமாக செயல்படுகிறது என காஞ்சிபுரம் டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்திலிருந்து புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த புகாரின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு இருந்த கண்ணன் மற்றும் அவரது தந்தை ராஜேந்திரனை காவல் நிலையத்திற்கு அழைத்து வர முயன்றபோது இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இதையடுத்து காவல் நிலையம் முன்பு பேசிய ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி ராக்கயி, தாங்கள் 8 லட்சம் ரூபாய் கட்டி டெண்டர் எடுத்த பிறகும், வேறு ஒருவர் கூடுதலாக பணம் கொடுத்து பாரை கைப்பற்ற முயல்வதால் தங்களை வெளியேற்ற முயற்சிக்கிறார்கள் என குற்றம்சாட்டினர். மேலும், போலீசார் ராஜேந்திரனின் சட்டையைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றதாகவும், அதனால் முதியவருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.

அதேபோல் கடையில் இருந்த சுமார் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் போட்டி, தலைக்கறி, சுண்டல், அவிச்ச முட்டை, வேர்க்கடலை, கூல்டிரிங்ஸ் போன்ற சைட் டிஷ் பொருட்களையும் போலீசார் எடுத்துச் சென்றதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் போலீசாருக்கு 3½ லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசு மற்றும் இனிப்புகள் வழங்கியிருந்தோம், ஆனால் தற்போது ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என ராஜேந்திரனின் மனைவி கண்ணீர் மல்க தெரிவித்தார்.
அப்போது, தங்களுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வோம் என ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்ததால் காவல் நிலையம் முன்பு பதற்றம் நிலவியது.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி சட்ட ஒழுங்கு ஆய்வாளர் நெடுமாறன் விளக்கம் அளிக்கையில், டாஸ்மாக் மண்டல மேலாளர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், கடந்த 23.06.2025 முதல் இந்தப் பாரின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பாரை அகற்ற வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் கேட்டுக்கொண்டதால் அதை நடத்தக் கூடாது என்று கூறியபோதும், அவர்கள் போலீசாருக்கு ஒத்துழைக்கவில்லை எனவும் கூறினார்.
அரசு நிர்வாகம் மற்றும் தனிநபர்களுக்கிடையிலான உரிமை மோதலாக உருவெடுத்துள்ள இந்தச் சம்பவம் கூடுவாஞ்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உயர்மட்ட போலீசார் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



