• Sat. Feb 24th, 2024

ஆனந்தம் விளையாடும் வீடு-சிறப்பு பார்வை

பெயர்: ஆனந்தம் விளையாடும் வீடு தயாரிப்பு: ஸ்ரீவாரி பிலிம்ஸ் ரங்கநாதன்
இயக்கம்: நந்தா பெரியசாமி இசை:சித்து குமார்
ஒளிப்பதிவு: பொர்ரா பாலபரணி நடிப்பு: கௌதம் கார்த்திக், ஷிவாத்மிகா
சேரன், சரவணன், ஜோ மல்லூரி, விக்னேஷ், கவிஞர் சினேகன், டேனியல்பாலாஜி, வெண்பா, பிரியங்கா மற்றும் பலர்

கொரோனா பொது முடக்கம் கூட்டுக் குடும்ப வாழ்க்கை, பாரம்பர்ய உணவு வகைகள், பழக்கவழக்கங்களை மீண்டும் கடைப்பிடிக்கவும், மீட்டெடுக்க வேண்டும் என்கிற சிந்தனையை மனித மனங்களில் ஏற்படுத்தியிருக்கிறது

இந்தசூழலில்கூட்டுக்குடும்பவாழ்வியலை அழுத்தமாக பதிவு செய்யும் ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஶ்ரீவாரி பிலிம்ஸ்ரங்கநாதனையும் இயக்கிய நந்தா பெரியசாமியையும் எவ்வளவு பாராட்டினாலும் பொருந்தும்

30 உறுப்பினர்கள் 12 குடும்பங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய குடும்பம் கூட்டுக் குடும்பமாக வாழ்வது இந்த காலத்தில் சாத்தியமா என்கிற கேள்வியை முன்வைத்து வந்திருக்கிறது ஆனந்தம் விளையாடும் வீடு அப்படி வாழ நினைத்து அனைவரும் ஒன்றாக வசிப்பதற்கான ஒரு வீட்டை அவர்களால் கட்ட முடிந்ததா என்பதே படத்தின் ஒருவரி கதை.

சேரன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பாண்டவர் பூமி படத்திலும் இதே போன்ற ஒரு கதையைத்தான் உணர்வுபூர்வமாக சொல்லியிருந்தார். அதே நினைவு இயக்குனர் நந்தா பெரியசாமிக்கும் வந்துவிட சேரனையும், உடன் கௌதம் கார்த்திக்கையும் முதன்மையான பாத்திரங்களில் நடிக்க வைத்திருக்கிறார்.

குடும்பத்தின் மூத்த உறுப்பினரான ‘ஜோ மல்லூரி’க்கு இரண்டு மனைவியர் கொண்ட குடும்பம் இருக்க இருவர் வழியிலும் குழந்தைகள் இருக்கிறார்கள். முதல் மனைவி இறந்து போயிருக்க அவரது மூத்த மகனாக சரவணன் இருக்கிறார். அதேபோல் இளைய மனைவிக்கு மூத்த மகனாக சேரன் இருக்க இவர்கள் இருவரும் எல்லோரும் ஒன்று சேர்ந்து வாழ ஒரு வீட்டைக் கட்ட முடிவு செய்கிறார்கள்

இப்படி ஒரு நல்லெண்ணம் கொண்ட குடும்பம் நன்றாக வாழ்வது பொறாமை எண்ணம் கொண்டவர்களுக்கு பிடிக்குமா..? அப்படி ஒரு தீய எண்ணம் கொண்ட டேனியல் பாலாஜி, அலைபாயும் மனம் கொண்ட சேரனின் தம்பிகளைக் கொண்டு ஒரு சதித் திட்டத்தைத் தீட்டி அந்த வீடு கட்டும் முயற்சிக்கு பல தடைகள் ஏற்படுத்துகிறார். அதையெல்லாம் தாண்டி சரவணன், சேரன் இருவரது ஆசை நிறைவேறியதா என்பதுதான் முழுப் படமும்.

‘பருத்திவீரன்சித்தப்பு’ சரவணனுக்கு அமைதியான அன்பான மூத்த அண்ணன் வேடம். கோபம் என்பதை எழுதிக் கூட படித்திராத அவர் நடிப்பிலும் மாடுலேஷனிலும் ‘வானத்தைப் போல’ விஜயகாந்தை நினைவுபடுத்துகிறார்.

இளைய குடும்பத்தின் மூத்த உறுப்பினரான சேரன் மொத்த கதையையும் தன்னுடைய தோளில் தாங்கிச் செல்கிறார். தன் கைக்குள் இருக்கும் தம்பிகளை விட்டால் சிதறி விடுவார்கள் என்று தொப்புள் கொடி உறவுகளை அன்பு என்னும் பாசக் கயிற்றால் கட்டிப் போட அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் கூட்டுக் குடும்பங்களில் வாழ்ந்து பழக்கப்பட்டவர்களுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தும். அடங்காத மனைவியிடம் அதிகாரத்தையும், எகிறும் தம்பிகளை எதிரிகளாக பார்க்க முடியாத தவிப்பில் ஆற்றாமையையும், அண்ணனின் அன்பைச் சொல்லி தம்பிகளை நல் வழிக்கு கொண்டு வரும் முயற்சியில் பெருமிதத்தையும் காட்டி மிகையில்லாத உணர்ச்சிக் குவியலாய் வருகிறார் சேரன்.

இந்த அண்ணன் தம்பி அன்பு கதையில் ஒரு கதாநாயகனாக கௌதம் கார்த்திக் நிறைவு செய்திருக்கிறார் இயக்குனர். சரவணனின் மகனாக வரும் அவரின் உதவியுடனேயே சேரன் தன் முன்னெடுப்புகளை நகர்த்துவது கதையின் உயிர்நாடி.

இந்த தலைமுறையின் சாக்லேட் பாயாக இருக்கும் கௌதம் கார்த்திக்கை படம் முழுவதும் வேட்டி சட்டையிலும் சாதாரண பேண்ட் சட்டைகளிலும் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறது. குடும்பம் இரண்டு பட்ட வேளையில் தங்கை வெண்பாவின் சீமந்தத்திற்கு தன் சித்தப்பாக்களை அழைக்க வரும் காட்சிகளில் பார்வையாளனைநெகிழ வைக்கிறார் கெளதம் கார்த்திக்.

அவருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார் ஷிவாத்மிகா (டாக்டர் ராஜசேகர் – நடிகை ஜீவிதா வாரிசு). ஓங்குதாங்கான கௌதம் கார்த்திக்குக்கு இணையான ஒயிலில் உயரமாக இருப்பவருக்கு ரத்தத்திலேயே நடிப்பு உறைந்திருக்கிறது. நடனத்திலும் நச்சென்று கவனம் ஈர்க்கிறார். .


நல்ல தம்பிகளில் விக்னேஷ், கவிஞர் சினேகனும் அடங்காத தம்பிகளில் சௌந்தரராஜனும் தனிக்கவனம் பெறுகிறார்கள்.

படத்தில் ஒரே குறிக்கோளுடன் ஒரே வில்லனாக வரும் டேனியல் பாலாஜியை இதைவிட உக்கிரமான பாத்திரங்களில் ஏற்கனவே ஏராளமான படங்களில் பார்த்து விட்டதால் இதில் காரம் கொஞ்சம் குறைவாகவே தெரிகிறார். வில்லனுக்கு உரிய புத்திசாலித்தனமும் அவரிடம் குறைவாகவே இருக்கிறது


30க்கும் மேற்பட்டநடிகர், நடிகையரை வைத்துக்கொண்டு அவர்கள் நடிப்பை வெளிப்படுத்த இட ஒதுக்கீடு அளிப்பதில், இயக்குநர் நந்தா பெரியசாமி படாதபாடு பட்டிருக்கிறார். இதில் சினேகன், கௌதம் கார்த்திக்கின் முறைப்பெண்ணாக வரும் பிரியங்கா உள்ளிட்டவர்களுக்கு ஒதுக்கீடு குறைவாகவே கிடைத்திருக்கிறது.

படத்தின் ‘ பெரிய ஆம்பளை ‘ ஜோமல்லூரிக்கு வசனம் பேசக்கூட படத்தில் அதிக வாய்ப்புகள் இல்லை.


இவர்கள் அத்தனை பேரையும் ஒருங்கிணைத்து இவர்களுக்காக உண்மையில் ஒரு பிரமாண்ட வீட்டையும் படிப்படியாகக் கட்டி படத்தைத் தயாரித்திருக்கும் ரங்கநாதன்தான் உண்மையிலேயே படத்தின் பெரிய ஆம்பளை. 200 எபிசோடுகள் கொண்ட ஒரு மெகா சீரியலாக தயாரித்து லாபம் பார்த்திருக்க வேண்டிய இந்தப் பெரிய உறவுகள் கொண்ட கதையை இரண்டரை மணிநேரத்துக்குள் கொண்டு வர நினைத்தது தமிழ் சினிமாவில் வரலாறாக பதிவாகும்


இதுவரை நாம் பார்த்த கேட்ட, நாம் அறிந்த பிரச்சினைகளின் ஊடே கதை நகர்வதைத் தவிர்த்து புதிதாக சிந்தித்திருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கும். ஆனால் பெரிய ஆத்தா பேச்சியம்மாவின் ஆசைப்படி அனைவரும் வாழ வீட்டைக் கட்டி புதிய வீட்டுக்குள் வெண்பாவின் பிரசவம் நிகழ்ந்து பெண் குழந்தை பிறக்க, அவளுக்கு பேச்சியம்மாவின் பெயரை வைப்பது நிறைவு.
கூட்டுக் குடும்ப உறவுகளின் பெருமை தெரிந்தவர்கள் கொண்டாடக் கூடிய இந்தப் படத்தை திருமணம் செய்து கொள்வது கூட சுமை என்று லிவிங் டுகெதரில் வாழ முற்படும் இன்றைய இளைஞர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் ஆனந்தம் விளையாடும் வீடுசித்து குமாரின் இசையில் ‘சொந்தமுள்ள வாழ்க்கை’ பாடல் படத்தின் ஒட்டுமொத்த ஜீவனையும் தாங்கி மனத்தில் ரீங்காரம் இடுகிறது. பொர்ரா பாலபரணியின் ஒளிப்பதிவும் கூட்டுக்குடும்ப வாழ்வை பிரேம் கொள்ளாமல் பரந்து விரிந்து படமாக்கியிருக்கிறது.

ஆனந்தம் விளையாடும் வீடு ரத்தக்களரியாக மாறிவரும் தமிழ் சினிமாவில் தென்றல் காற்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *