அரசு தோட்ட தொழிலாளர்களின் ஊதிய உயர்வு சம்மந்தமாக தி.மு.க அரசு வெளியிட்ட அரசாணையை செயல்படுத்தக் கோரி, வருகிற மார்ச் 5ம் தேதி நீலகிரி மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அறிவித்திருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
இது சம்மந்தமாக நீலகிரி மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் பிலாண்டேசன் ஒர்க்கர்ஸ் காங்கிரஸ் தொழிற்சங்க தலைவர் சுப்ரமணி, எல்பிஎப் துனை பொதுச்செயலாளர் மாடசாமி, சிஐடியூ தலைவர் ரமேஷ், ஐஎன்டியூசி யோகநாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட அரசு தோட்ட தொழிலாளர்களின் ஊதிய உயர்வு திமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த கோப்பை ஆய்வு செய்து டேன்டீ உள்ளிட்ட தோட்ட தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதற்கு 30.7.2021 தேதி அரசாணை வெளியிட்டது. இதனால், தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், தற்போது 7 மாதங்கள் ஆகியும் அரசு அறிவித்த குறைந்தபட்சம் ஊதியத்திற்கான இறுதி ஆணை வராததால் தோட்டத்தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு குறைந்தபட்ச ஊதியத்தை கால தாமதமின்றி உடனடியாக அறிவிக்க கேட்டு தோட்ட தொழிலாளர்களின் ஊதிய கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் மார்ச் 5ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் ‘மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளனர்.