• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நீட் தேர்வை கணினி முறையில் நடத்த திட்டம்

Byவிஷா

Jul 1, 2024

நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, மதிப்பெண் குளறுபடி போன்ற காரணங்களால் நீட் தேர்வை கணினி முறையில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக தேசிய தேர்வு முகமையால் இந்த வருடம் நடத்தப்பட்ட நீட் தேர்வில் பல்வேறு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியதில் குளறுபடி உள்ளிட்ட பல முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து 1000-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட்டது. வினாத்தாள் கசிவில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்தவழக்கை சி.பி.ஐ. தற்போது விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் பாராளுமன்ற மக்களவை கூட்டத் தொடரிலும் எதிர்க்கட்சிகள் நீட் முறைகேடு பிரச்சனையை தொடர்ந்து எழுப்பி வருகின்றன. இதுகுறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையில் கடந்த 22-ம் தேதி, தேர்வு நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளில் சீர்திருத்தங்களை பரிந்துரைக்கவும், தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்யவும் முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது.

இந்நிலையில் அடுத்த வருடம் முதல் நீட் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த தேசிய தேர்வு முகமை  திட்டமிட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. தற்போது வரை கொள்குறி வகை வினாக்கள் அடங்கிய வினாத்தாள் அளிக்கப்பட்டு, விடைகளை  ஓ.எம்.ஆர்  தாளில் கலர் செய்யும் முறை இருந்து வருகிறது. 
எனவே தற்போது பொறியியல் நுழைவுத் தேர்வுகளான ஜே.இ.இ. தேர்வுகள் கணினி மூலம் தேசிய தேர்வு முகாமையால்  நடத்தப்படுவதை போல நீட் தேர்வுகளையும் அடுத்த வருடம் முதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 
தேசிய மருத்துவ கவுன்சில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் தெரிவிக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுகள் கணினி மூலம் நடத்தப்படும்.