அஜித்தின் வலிமை திரைப்படம் இன்று இந்தியா முழுவதும் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் சுமார் 700 திரையரங்குகளில் வலிமை திரைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
கோவையில் வலிமை வெளியாகியுள்ள திரையரங்கின் முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த திரையரங்கில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் திரையரங்கு முன்பு திரள்வதும் பிரச்சினைகள் ஏற்படுவதும் தடியடி நடத்தப்படுவதும் வாடிக்கை. ஆனால் பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற வன்முறை சம்பவங்கள் அரிதிலும் அரிதாகவே நடக்கும்.
கோவையில் சுமார் 20 திரையரங்குகளில் வலிமை. வெளியாகியுள்ளது. கோவை பூக்கடை பகுதியில் அமைந்துள்ள திரையரங்கில் வலிமை திரையிடப்பட்டுள்ளது. படத்தை பார்க்க ரசிகர்கள் திரண்டு இருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திரையரங்கு வாசலில் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.
இதில் படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவரின் இருசக்கரவாகனம் லேசான சேதமடைந்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
மத, ஜாதி, அரசியல் மோதல்களில் தான் இதேபோன்று பெட்ரோல் குண்டுகள் வீசப்படும். இப்போது ஒரு நடிகரின் படம் வெளியான திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் என்ன, இதற்குப் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.