

கட் அவுட்டுகளுக்கு அபிஷேகம் செய்ய பால் என நினைத்து தயிரை திருடிய அஜித் ரசிகர்களின் வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார். அவரின் 60-வது படமாக உருவாகியுள்ள இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பல நாட்களாக வலிமை படத்திற்காக காத்துக் கொண்டிருந்த அஜித் ரசிகர்கள் இன்று திருவிழா போல வலிமை ரிலீஸை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டிலுள்ள ரோகினி திரையரங்கில் வலிமை பட கட் அவுட்களுக்கு அபிஷேகம் செய்ய, பால் என நினைத்து ஆவின் தயிரை வண்டியிலிருந்து திருடியிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். அபிஷேகத்திற்காக அதை பாக்கெட்டை கட் செய்யும் போது, அது தயிர் என தெரிய வந்து மிகுந்த ஏமாற்றமும் அடைந்திருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
