• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சீமான் தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்…பரபரப்பு புகார்!

ByP.Kavitha Kumar

Jan 17, 2025

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு பெரியார்-அம்பேத்கர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ப.ரத்தினசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்தார்.

அந்த மனுவில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் விளம்பரத்துக்காகவும் சுயலாபத்துக்காகவும் மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில், இனம் மொழி அடிப்படையில் பிரிவினைவாத கருத்துக்களை பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

கடந்த 2023-ம் ஆண்டு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் போது, பட்டியலின சமூகத்தை இழிவுபடுத்தி பேசியதாக சீமான் மீது புகார் அளிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பெரியார் மீது வேண்டுமென்றே வீண் அவதூறுகளை பொதுவெளியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பரப்பி உள்ளார். இதுகுறித்து தமிழகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஈரோட்டில் தேர்தல் பரப்புரை வாய்ப்பைப் பயன்படுத்தி மீண்டும், இனம்,சாதி,மொழி அடிப்படையில் பிரிவினைவாத கருத்துக்களை பேசி, கலவரத்தை தூண்டி விட சீமான் முயற்சிக்கிறார். அரசியலமைப்புச் சட்டப்படி இது மாபெரும் குற்றமாகும். எனவே, கலவரத்தை தூண்டும் வகையில் சீமான் தேர்தல் பரப்புரை செய்ய தடை விதிக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.