• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பானிபூரி கடை மீது காரை மோதி மதுபோதை வாலிபர்கள் ரகளை..,

BySeenu

Jul 22, 2026

கோவை கண்ணப்ப நகர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) கட்சி கொடி கட்டிய காரில் வந்த நான்கு போதை வாலிபர்கள், சாலையோரம் பானிபூரி வியாபாரம் செய்து வந்த ஏழை வியாபாரியின் தள்ளுவண்டி மீது காரை மோதி பயங்கர ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் கொந்தளிப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பொதுமக்களிடம் இருந்து தப்பிக்க ஓடிய அந்த போதை ஆசாமிகள் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

கோவை, கண்ணப்ப நகர் பகுதியில் ‘தென்றல் மணமகிழ் மன்றம்’ என்ற பெயரில் தனியார் மதுபான கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், நேற்று வேளையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி கட்டப்பட்ட கார் ஒன்றில் 4 இளைஞர்கள் மது அருந்துவதற்காக வந்து உள்ளனர். அவர்கள் தங்களது காரை மதுபான கூடத்தின் எதிர்புறமாக அமைந்து உள்ள புறக்காவல் நிலையம் அருகிலேயே ‘நைஸாக’ நிறுத்தி விட்டுச் சென்று உள்ளனர்.

​நாள் முழுதும் மது அருந்தி விட்டு, இரவு நேரத்தில் அதிக போதையில் தங்களது காரை எடுக்க அவர்கள் வந்து உள்ளனர். அப்போது காருக்கு முன்பாக, கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் வழக்கம் போலத் தனது தள்ளுவண்டியில் பானிபூரி வியாபாரம் செய்து கொண்டு இருந்தார்.

காரில் ஏறிய அந்த 4 போதை வாலிபர்களும், வழிவிடுமாறு ஏழை வியாபாரி லட்சுமணனிடம் ஆக்ரோஷமாக காரை எடுத்து லட்சுமணனின் பானிபூரி தள்ளுவண்டி மீது ‘டமார்’ என மோதி உள்ளனர். வண்டி சேதம் அடைந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமணன் தட்டிக் கேட்ட போது, போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அந்த 4 வாலிபர்களும் அவருடன் தகாத வார்த்தைகளைப் பேசி ரகளையில் ஈடுபட்டனர்.

​பயந்து போன லட்சுமணன் அக்கம், பக்கத்தினரை உதவிக்கு அழைக்கவே, அங்கு திரண்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடமும் அந்த போதை ஆசாமிகள் அராஜகமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், ரகளை செய்த 4 பேரையும் கையும், களவுமாகப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைக்க முயன்றனர்.

பொதுமக்கள் தங்களைச் சூழ்ந்து கொண்டதை அறிந்த அந்த 4 வாலிபர்களும், கூட்டத்தில் இருந்து அலறி அடித்துக் கொண்டு தப்பி ஓடி, அருகில் இருந்த காவல் நிலையத்திற்குள் புகுந்து தஞ்சம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆத்திரத்தில் திரண்டு இருந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை வியாபாரி லட்சுமணனுக்கு எவ்வித நஷ்டஈடோ அல்லது நியாயமோ ?பெற்றுத் தராமல், த.வெ.க கட்சி கொடியுடன் வந்த நபர்களுக்குக் காவல் துறையினர் ஆதரவாகச் செயல்படுவதாக அப்பகுதி மக்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.

இதனிடையே, போதை வாலிபர்களின் இந்த அராஜகத்தையும் பொதுமக்களின் கொந்தளிப்பையும் அங்கு இருந்த சிலர் தங்களது செல்போன்களில் துல்லியமாகப் படம் பிடித்து உள்ளனர்.

தற்பொழுது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.