• Fri. Apr 19th, 2024

மூணாறில் ‘படையப்பா’ ஓட்டம் பிடிக்கும் மக்கள்..

மூணாறில் பிரபலமடைந்து வரும் ‘படையப்பா’ என்றழைக்கப்படும் வயதான ஆண் காட்டு யானையை பார்க்க சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர்.

கேரள, இடுக்கி மாவட்டத்தில் மூணாறு அமைந்துள்ளது. அழகிய நகரமான இங்கு, எங்கு பார்த்தாலும் வளைந்து நெளிந்து செல்லும் ரோடுகள், இரு புறமும் பச்சை பசேல் என தேயிலை தோட்டங்கள் நம்மை வரவேற்கும். இவைகளுக்கு மத்தியில் அவ்வப்போது தவழ்ந்து வரும் முகில்கள் கூட்டம் கண்களுக்கு விருந்து படைக்கும். இயற்கை எழில் கொஞ்சும் மூணாறு, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர். மிகவும் அமைதியான சூழல் நிலவுவதால், பல்வேறு வெளிநாட்டவர்களும் இங்கு பல மாதங்கள் தங்கிச் செல்கின்றனர். அப்படி சிறப்பு வாய்ந்த இந்த மூணாறில் ‘படையப்பா’ என்ற பெயர் பிரபலமடைந்துள்ளது. யார்? அந்த படையப்பா…! என விசாரித்த போது…சில உண்மைகள் நமக்கு தெரியவந்தது. சமீபகாலமாக மூணாறு நகருக்குள் தன்னந் தனியாக கம்பீரமாக வலம் வரும் வயது முதிர்ந்த ஆண் காட்டு யானை பெயர் தான், படையப்பா. மற்ற யானைகளை காட்டிலும் இது மிகவும் புத்திசாலி. ஆனால் மூர்க்கத்தனம் அதிகம். யாரையும் தன்னிச்சையாக எதிர்க்கும் குணம் கொண்டது. இதனால் படையப்பா..வை சிலர் எங்கு கண்டாலும் தலைதெறிக்க ஓட்டம் பிடிப்பர். பசியெடுக்கும் நேரத்தில் நகரில் உள்ள ஏதாவது ஒரு கடைக்குள் புகுந்து பழங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்லும். கடைக்காரர்கள் இதை பெரிதாக நினைக்க மாட்டார்கள். இரவு நேரத்தில் பூட்டி கிடக்கும் கடையை சேதப்படுத்தி தனக்கு தேவையானதை எடுத்து பசியாரும். பிறகு
‘ஹாயாக’ நடந்து மூணாறு – உடுமலைப்பேட்டை ரோட்டில் உள்ள வாகுவாரை எஸ்டேட் பகுதிக்குள் தஞ்சமடைந்து விடும். மற்ற காட்டு யானைகளுடன் இது செல்லாது. மூணாறு வரும் சுற்றுலா பயணிகள் இந்த படையப்பாவை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என ‘தவம்’ கிடப்பது தான் ஹைலைட்டான விஷயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *