குப்பை கிடங்கில் ஐந்துக்கும் மேற்பட்ட மனித தலைகள் மற்றும் உடல் உறுப்புகள் கிடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்பத்துவேலி பகுதியில் உள்ள குடமுருட்டி ஆற்றங்கரை அருகே குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. அந்த குப்பை கிடங்கில் ஐந்துக்கும் மேற்பட்ட மனித தலைகள், மண்டை ஓடு, எலும்புக் கூடுகள் உள்ளிட்ட மனித உடல் உறுப்புகள் கிடந்ததை, ஆற்றில் குளிப்பதற்காக வந்த மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
இதில், அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளதால் இதற்காக ஏற்கெனவே உள்ள பழைய பொருள்களை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்தது. இந்நிலையில் அங்கிருந்த அடையாளம் தெரியாத சடலங்களின் சில உறுப்புகள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு பாட்டில்களிலும், பெட்டிகளிலும் சேகரித்து வைக்கப்பட்டதாகவும்,
அதனை முறையாக அப்புறப்படுத்தாமல், அனைத்தையும் ஆற்றங்கரையில் தூக்கி வீசி சென்றுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் மக்களை அச்சுறுத்தும் விதமாகவும், நோய் தொற்று பரப்பும் வகையில் செயல்பபட்ட ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்தனர்.