• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மோடி ஆட்சியில் மக்கள் பயத்தில் உள்ளனர்- ராகுல் காந்தி

ByA.Tamilselvan

Sep 4, 2022

விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது
போராட்டத்தில் கலந்துகொண்ட ராகுல் காந்தி பேசியதாவது:- பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் வெறுப்பும், கோபமும் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி அரசின் கொள்கைகள் இரண்டு பெரிய தொழிலதிபர்களுக்கு மட்டுமே பலனளித்து வருகின்றன. அவர் தனது நண்பர்களுக்கு சம்பாதித்து தருவதற்காக ஓய்வில்லாமல் உழைக்கிறார். மக்களோ விலைவாசி உயர்வால் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலம், வேலையின்மை பற்றி பயப்படுகிறார்கள். பாஜக, ஆர்எஸ்எஸ் இரண்டும் நாட்டை பிளவுபடுத்துகிறது. பயம் மற்றும் வெறுப்பு மூலம் மக்களை பிளவுபடுத்துகிறார்கள். இந்த பயத்தால் யாருக்கு லாபம்? நரேந்திர மோடி அரசால் ஏழைகள், விவசாயிகள், சிறு வியாபாரிகள் ஏதாவது பலன் பெறுகிறார்களா? இரண்டு கார்ப்பரேட் முதலாளிகள் மட்டுமே பலன் பெறுகிறார்கள். இரு தொழிலதிபர்களுக்கும் அனைத்து சலுகைகளையும் பாஜக அரசு கொடுத்து வருகிறது.
மூன்று சட்டங்கள் கொண்டு வரப்பட்டது விவசாயிகளின் நலனுக்காக இல்லை. இரு கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக தான் கொண்டு வரப்பட்டது. ஆனால் விவசாயிகள் சாலையில் வந்து தங்கள் சக்தி என்ன என்பதை பிரதமர் மோடிக்கு காட்டிவிட்டனர். நாட்டின் முதுகெலும்பான சிறு, குறு நிறுவனங்களுக்கு பிரதமர் ஜிஎஸ்டி மூலம் மூடுவிழா நடத்தி விட்டார். இதன்மூலம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. இரு பெரும் கார்ப்பரேட் முதலாளிகளும் வேலைவாய்ப்பையும் வழங்குவதில்லை. அதுமட்டுமல்லாமல், கங்கிரஸ் ஆட்சியில் இருந்த 70 ஆண்டுகளில், இப்போது போல் விலைவாசி உயர்வு இருந்ததில்லை. பணவீக்கத்தால் இப்போது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்னைகளுக்கு பிரதமர் மட்டுமே பொறுப்பு. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.