• Fri. Mar 29th, 2024

பீலேவின் உடல் இன்று அடக்கம்
லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி

மறைந்த பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.
உலகக் கோப்பை கால்பந்தில் 3 முறை மகுடம் சூடிய ஒரே வீரரான பிரேசிலின் பீலே (வயது 82) புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவையொட்டி பிரேசிலில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. பிரேசில் நாட்டின் சாவ் பாலோ மருத்துவமனையில் உள்ள பீலேவின் உடல் இன்று காலை அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும் பீலேவின் உடல் அடங்கிய சவப்பெட்டி இன்று அங்குள்ள தெருக்களின் வழியாக எடுத்து செல்லப்படும் போது, அவரது தாயார் 100 வயதான செலிஸ்டி அரன்டெஸ் வசிக்கும் இல்லத்தையும் கடந்து செல்ல இருக்கிறது. படுத்த படுக்கையாக, மகன் இறந்த தகவலை புரிந்து கொள்ளும் நிலையில் செலிஸ்டி இல்லை. இறுதியில் 4.4 ஏக்கர் நிலப்பரப்பில், 14 அடுக்கு மாடிகளை கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இங்குள்ள பெட்டகத்தில் பதப்படுத்தப்பட்ட அவரது உடல் வைக்கப்படும். ஏறக்குறைய 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்டகங்கள் இங்கு உள்ளன. இது தான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும். இங்கு நடக்கும் இறுதி சடங்கில் அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. கால்பந்து நாயகன் பீலேவின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *