• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஒரு ஊரில் ஒருவர் ரொட்டிக் கடை வைத்திருந்தார். அவர் கடைக்கு வெண்ணெய் சப்ளை செய்பவர் மீது அவருக்கு மிகுந்த சந்தேகம் எழுந்தது. தன்னை அவர் ஏமாற்றுவதாக வருத்தம் இருந்தது. அரைக் கிலோ வெண்ணெய் என்று அவர் தருவது அரை கிலோவே இல்லை. எடை குறைவாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.


இருவருக்கும் சண்டை முற்றி ஒரு நாள் நீதிபதி முன் வழக்கு வந்தது. வெண்ணெய் வியாபாரி தன்னிடம் கொடுத்த வெண்ணெய் பொட்டலத்தை நீதிபதி முன் நிறுத்துக் காட்டிய ரொட்டிக் கடைக்காரர்,
“பாருங்கள் 450 கிராம் தான் இருக்கிறது. இப்படித்தான் என்னை பலமுறை ஏமாற்றி இருக்கிறார். இவரை தண்டியுங்கள்” என்று கூச்சலிட்டார்.


நீதிபதி வெண்ணெய் வியாபாரியை பார்த்து “நீங்கள் என்ன சொல்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் 50 கிராம் குறைவாகத் தரலாமா? அது குற்றமில்லையா?” என்று கேட்டார்.


“ஐயா.. என்னிடம் எடைக்கல் கிடையாது. அதனால் 500 கிராம் எடையுள்ள பொருள் ஏதேனும் ஒன்றை எடைக் கல்லுக்குப் பதிலாக பயன்படுத்துவது வழக்கம். பெரும்பாலும் இவரது கடை ரொட்டியைத் தான் வாங்குகிறேன். அதையே அவ்வாறு பயன்படுத்துவேன். பாக்கெட் மீது எடை 500கிராம் என்று எழுதப்பட்டிருப்பதை நம்பி இவரது ரொட்டியை எடைக் கல்லுக்குப் பதிலாக தராசில் பயன்படுத்துவேன். இப்போது பாருங்கள் என் வெண்ணெயும் அவரது ரொட்டியும் சம எடையாக இருக்கும்.” என்று தராசில் இரண்டையும் எதிர் எதிராக வைத்தார்.
சமமாக இருந்தது.


நீதி: எல்லோரும் பிறர் தன்னை ஏமாற்றக் கூடாது என்று நினைக்கிறார்களே தவிர, தானும் பிறரை ஏமாற்றக் கூடாது என்று ஏன் நினைப்பதில்லை.