• Wed. Apr 24th, 2024

பேரிடர் நிதி விளக்கம் கேட்டும் பன்னீர்செல்வம்

மத்திய அரசிடமிருந்து நிதி வரும்வரை காத்திருக்காமல், வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பெருமழையால் ஏற்பட்ட சேதங்களில் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக ரூ.6,230 கோடியே 45 லட்சத்தை விடுவிக்க உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுரை வழங்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் 29-12-2021 அன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். இது மட்டுமல்லாமல், மாநில பேரிடர் நிவாரண நிதியும் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அப்படியென்றால், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசின் பங்காக 2021-2022-ம் ஆண்டில் எவ்வளவு ஒதுக்கப்பட்டது என்ற விவரத்தையும், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக ஏதாவது ஒதுக்கப்பட்டதா என்ற விவரத்தையும், இதுவரை எத்தனை கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது என்ற விவரத்தையும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு.” என்று கூறியுள்ளார்.


மேலும், “ வடகிழக்குப் பருவமழையால் பயிர்ச்சேதம் ஏற்பட்டநிலையில், இதற்கென அமைக்கப்பட்ட குழு ஆய்ந்து அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில் முழுமையாக சேதமடைந்த இனங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்றும், நடப்பு சம்பா பருவத்தில் நடவுசெய்து, நீரில் மூழ்கி சேதமடைந்த பகுதிகளை மறுசாகுபடி செய்ய ஏதுவாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.6,038 மதிப்பீட்டில் இடுபொருட்கள் வழங்கப்படும் என்றும் நவம்பர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்ததைச் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சித்தலைவராக அவர் இருந்தபோது ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வைத்த வேண்டுகோள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கூறியிருந்தேன். அதற்கு இதுநாள்வரை எவ்வித பதிலும் தரப்படவில்லை.” என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *