



தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி தாயார் சமேத ஸ்ரீ யோக நரசிங்க பெருமாள் திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு யோக நரசிங்க பெருமாள் திருக்கோவில். இத்திருக்கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலாகும். இந்து அறநிலை துறைக்கு சொந்தமான திருக்கோவிலில் விசேஷ நாட்களில் பல்வேறு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுவது வழக்கம்.


அதே போன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, ஆண்டு தோறும் இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இக்கோவிலில் எழுந்தருளியுள்ள மகாலட்சுமி தாயாருக்கு அபிஷேகங்கள் மற்றும் சேர்த்தி சேவை மற்றும் புஷ்பாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முன்னதாக மகாலட்சுமி தாயார் அவதரித்த இந்தப் பங்குனி உத்திரத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஸ்ரீ மகாலட்சுமி தாயாருக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சன பொடி, பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கலசங்கள் கொண்டு கோவில் பிரகாரத்தை வலம் வந்து அம்மனுக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் பெருமாள் மற்றும் மகாலட்சுமி தாயார் கோவில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு சேர்த்தி சேவை நடைபெற்றது. அடுத்ததாக நரசிங்க பெருமாள் மற்றும் தாயாருக்கு மல்லிகை, ரோஜா, சம்மங்கி, செவ்வந்தி, தாமரை, போன்ற பல்வேறு பூக்கள் கொண்டு புஷ்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது.

பெருமாள் மற்றும் தாயாருக்கு நட்சத்திர தீபம், கும்ப தீபம், உள்ளிட்ட பல்வேறு தீபங்கள் கொண்டும் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உத்தமபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து சென்றனர். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


