• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ByKalamegam Viswanathan

Mar 5, 2025

நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்
மதுரை மாவட்டம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி பெருவிழா இன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஸ்ரீ முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என சிறப்பு பெற்றது திருப்பரங்குன்றம். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் பங்குனி பெருவிழா பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் கோயில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு சுப்பிரமணிய சுவாமி முன்னிலையில் பங்குனி பெருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மா இலை, தர்ப்பைப்புல், பூ, குங்குமம் சந்தனம் கொண்டு தங்கம் முலாம் பூசப்பட்ட கொடி கம்பம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவினை ஒட்டி சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க பல்லக்கிலும், மாலையில் தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், வெள்ளி யானை வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 16ஆம் தேதி சூரசம்ஹார லீலை நடைபெறும்.

தொடர்ந்து 17ஆம் தேதி4 மாலை சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகமும், 18 ஆம் தேதி சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு மீனாட்சி அம்மன், சொக்கநாதர் பிரியாவிடை முன்னிலையில் பகல் 12 மணிக்கு மேல் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 19ஆம் தேதி காலை 6 மணி அளவில் கிரிவலம் வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெறும்.