மன்னருக்கு சுண்டைக்காய் பரிசளித்த விவசாயி:
தஞ்சை நாட்டை ஆண்டு வந்த தமிழ்வாணன், ஆண்டு தோறும், தன் பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடுவார். அன்று, நாட்டில் உள்ள உழவர்கள், தங்கள் நிலங்களில் விளைந்த பொருட்களை, மன்னருக்கு காணிக்கையாக வழங்கினர். மன்னரும், அவர்களுக்கு பரிசுப் பொருட்களை கொடுத்து அனுப்பினார்.
செல்லப்பா என்பவனது நிலத்தில் ஏராளமான சுண்டைக்காய்கள் காய்த்திருந்தன. அதை கூடை கூடையாக கொண்டு போய், மன்னனுக்கு காணிக்கையாக கொடுக்க எண்ணினான். “நான், மன்னருக்கு சுண்டைக்காயை காணிக்கையாக தரப்போகிறேன், ஏராளமான பொன்னையும், பொருளையும் பரிசாக வாங்கி வருகிறேன் பார்,” என்று தன் மனைவியிடம் கூறி சென்றான் செல்லப்பா. அரண்மனையை அடைந்து, விளைபொருட்களுடன் வரிசையாக நிற்கும் உழவர்களுடன், நின்றான் செல்லப்பா.
அவன் முறை வந்ததும், வணங்கி, “அரசே! உங்களுக்காக நான் சுண்டைக்காய்களை காணிக்கையாக கொண்டு வந்துள்ளேன்,” என்றான்.
“எனக்கு சுண்டைக்காய் பிடிக்காது என்று வீம்புக்கு கொண்டு வந்துள்ளாயா… உன்னை…” என்று பற்களை நறநறத்தார் மன்னர்.
“இவன் கொண்டு வந்த சுண்டைக்காய்களை, இவன் முகத்திலேயே எடுத்து அடியுங்கள்,” என்று காவலர்களுக்கு ஆணையிட்டார்.
சுண்டைக்காயை ஒவ்வொன்றாக எடுத்து, அவன் தலையை குறிபார்த்து எறிந்தனர் காவலர்கள்.
செல்லப்பாவுக்கு வலி உயிர் போயிற்று. இருப்பினும் அவன் அழவில்லை; சிரித்துக் கொண்டே இருந்தான்.
காவலர்கள் அடிக்க அடிக்க அவன் தொடர்ந்து சிரித்துக் கொண்டேயிருந்தான்.
“உனக்கு வலிக்கவில்லையா… சிரித்துக் கொண்டிருக்கிறாயே…” என்று கோபத்துடன் கேட்டார் மன்னர்.
“அரசே! தங்களுக்கு தேங்காயும் பிடிக்காது அல்லவா?” என்றான் செல்லப்பா.
“ஆமாம் பிடிக்காது!” அதற்கென்ன இப்போது என்றார் மன்னர்.
“என் பக்கத்து வீட்டுக்காரன் கூடை நிறைய தேங்காயுடன் எனக்கு பின்னால் நிற்கிறான். அவன் நிலைமையை எண்ணியே சிரித்தேன்,” என்றான்.
தன் முட்டாள்தனத்தை சாமர்த்தியமாக உணர்த்திய செல்லப்பாவுக்கு, எராளமான பொன்னையும், பொருளையும் பரிசாக கொடுத்தார் அரசர்.





