• Sat. Apr 20th, 2024

ஆன்ட்டி இந்தியன் பட தயாரிப்பாளர் பெயரை ரவுடிகள் பட்டியலில் இருந்து நீக்க உத்தரவு

’’என் மீது 1995 ஆம் ஆண்டு விளக்குத்தூண் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் வழக்கு தவறுதலாக பதிவு செய்யப்பட்டது; அதன் பின்பு 25 வருடங்களாக எந்த ஒரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை’’

மதுரையை சேர்ந்த முகமது ரபிக் (எ) ஆதம் பாவா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் ஆன்ட்டி இந்தியன், தப்பாட்டம் போன்ற படங்களின் தயாரிப்பாளர். மேலும் பல்வேறு தொழில்களை செய்து வருகிறேன். என் மீது 1995 ஆம் ஆண்டு விளக்குத்தூண் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் வழக்கு தவறுதலாக பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு என் மீதான வழக்கு நீக்கப்பட்டது. அதன் பின்பு 25 வருடங்களாக எந்த ஒரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை.


ஆனால் விளக்குத்தூண் காவல் நிலையத்தில் ரவுடிகள் பெயர் பட்டியலில் எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை நீக்கக்கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் மற்றும் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே விளக்குத்தூண் காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இருந்து எனது பெயரை நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரரின் பெயரை ரவுடிகள் பட்டியலில் இருந்து நீக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *