2026 தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி விட்ட நிலையில், பாஜக கூட்டணியுடன் நீடிப்பது குறித்து, மாவட்ட நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் 2026 தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. திமுக கூட்டணி பலமாக உள்ளது. இதில் தேமுதிகவும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இப்போதும் பாஜக கூட்டணியில் இருப்பதாக கூறி வருகிறார். அதிமுகவுடன் இணையும் அவரது முயற்சிகள் வெற்றி வெறவில்லை. அதற்கான சாத்தியக்கூறும் தென்படவில்லை என தெரிகிறது.
இதனிடையே கூட்டணி தொடர்பான அறிவிப்பின்போது, மத்திய அமைச்சர் அமித் ஷா தன்னை அழைக்காதது வருத்தம் அளிப்பதாக, தனது ஆதங்கத்தை பன்னீர்செல்வம் வெளிப்படுத்தினார். அதிமுக இணைப்பு தொடர்பான கேள்விக்கு, அது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறிவிட்டார். அதனால் பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்க பாஜகவும் ஆர்வம் காட்டவில்லை என்பது உறுதியாகியுள்ளது. எனவே, அதிமுகவுடனான இணைப்பு சாத்தியமில்லை என்ற நிலைக்கு பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் வந்துவிட்டனர்.
இந்நிலையில், எதிர்கால திட்டம் குறித்து கட்சியின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் பன்னீர்செல்வம் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை வரும் ஜூலை 7-ம் தேதி கூட்டி, அதில் முக்கிய முடிவை எடுப்பது என முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணியில் நீடிப்பதா, விலகுவதா? என முடிவெடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தவெகவுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதா என நிர்வாகிகளிடம் கேட்டபோது, “நாங்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா என கோஷமிட்டு கட்சியை வளர்த்தவர்கள். அதனால் விஜயுடன் இணைந்து பயணிக்க கொஞ்சம் நெருடலாக உள்ளது, இப்போதைக்கு இந்த முயற்சி இல்லை. அதிமுகவுடன் இணைப்பு இல்லை என்ற நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது, நம்மை வளப்படுத்திக்கொள்வது தொடர்பாக தான் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது” என்றனர்.
கூட்டணியில் நீடிப்பது குறித்து ஓ.பி.எஸ் அவசர ஆலோசனை
