• Thu. Apr 25th, 2024

எங்க கிட்டையேவா! புகழேந்தியை அதிரவைத்த ஓபிஎஸ் – ஈபிஎஸ்!

By

Aug 27, 2021 ,

அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்ந்த வழக்குகளில் பெங்களூரு புகழேந்தி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்கி, ஜூன் 14ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட கூட்டறிக்கை வெளியிட்டனர்.

அதில் தெரிவித்திருந்த காரணம் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி இருவரையும் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி புகழேந்தி, சென்னை எம்.பி., – எம்.எல்.ஏ., மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இருவரையும் செப்டம்பர் 14ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித் தனியே மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, தவறு செய்த ஒரு ஊழியரை நீக்கியதற்காக ஒரு தனியார் நிறுவனம் மீது அவதூறு வழக்கு தொடர முடியாது எனவும், அப்படி அனுமதித்தால் ஆயிரக்கணக்கான அவதூறு வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கும் என தெரிவித்தார். கட்சியின் கொள்கைகளுக்கு எதிராகவும், களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும் நடந்து கொண்டதால் நீக்கப்பட்டார் எனவும், ஒருவர் நீக்கப்பட்டால் அதனை கட்சியின் உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்றும், பொது மக்களை அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என நாங்கள் கூறவில்லை எனவும், கட்சிகாரர்களுக்கான அறிக்கைதான் என்பதால், அவதூறு ஆகாது என்பதால் வழக்கை தடைவிதித்து, ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ. நடராஜன் ஆஜராகி, புகாரில் அவதூறுக்கான எந்த சாராம்சமும் இல்லை எனவும், ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர் கட்சியின் விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற விதியை மீறிய
புகார்தாரர் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக நடந்து கொண்டதால் அவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டனர் எனவும் வாதிட்டார்.

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும்
அவர்களுக்கு ஒருவரை கட்சியில் இருந்து நீக்கவும் முழு அதிகாரம் உள்ளது எனவும், புகழேந்தி 2017ல் வெளியேற்றியபோதும், இதே வாரத்தைகளை பயன்படுத்தி தான் வெளியேற்றப்பட்டார் என நீதிபதி கவனத்திற்கு கொண்டுவந்தார். எந்த கட்சியும் ஒருவரை நீக்கினால் இதே போன்ற வாரத்தையை தான் பயன்படுத்தும் என்றும், ஆனால் அதற்காக ஒரு அவதூறு வழக்கு தொடரப்படுவது இதுவே முதல்முறை என்றும் தெரிவித்தார்.

புகழேந்தி தரப்பில் மூத்த வழக்கறிஞர்
என்.ஜி.ஆர் பிரசாத் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்வதாகவும், தடை விதிக்க வேண்டியதற்கான அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார்

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார், வழக்கு குறித்து புகழேந்தி பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்ததுள்ளார். சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிப்பது குறித்து அன்றைய தினம் முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *