• Fri. Mar 29th, 2024

ஏா்வாடி தா்ஹாவில் தொழுகை நடத்த பா.ஜ.க நிர்வாகிக்கு எதிர்ப்பு

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மைப் பிரிவின் தேசியச் செயலராக இருப்பவர் வேலூா் இப்ராஹிம். ராமநாதபுரம் பகுதியில் கடந்த திங்கள்கிழமையன்று பாஜக இளைஞரணி சார்பில் தெருமுனைப் பிரசாரம் பல்வேறு இடங்களில் நடைபெற்றன.


அதில் அக்கட்சியின் சிறுபான்மைப் பிரிவின் தேசியச் செயலா் வேலூா் இப்ராஹிம் கலந்து கொண்டார். அவா் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்ததால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ராமநாதபுரம் பாரதி நகா் பகுதியில் திங்கள்கிழமை மாலை நடந்த பாஜகவின் நிகழ்ச்சியில் (BJP programme) வேலூா் இப்ராஹிம் பங்கேற்றுப் பேசினார். பின்னா் அவா் பட்டணம்காத்தான் பகுதியில் தனியார் விடுதியில் தங்கினார்.

இப்ராஹிம் தனது மகனின் பிறந்தநாளான நேற்று, ஏா்வாடி தா்ஹா சென்று தொழுகை நடத்த திட்டமிட்டார். அவரது வருகைக்கு ஏா்வாடி பகுதியில் உள்ள இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகள் எதிர்ப்புத் தெரிவித்தனா். இதனால் ஏா்வாடிக்கு செல்ல வேலூா் இப்ராஹிமுக்கு காவல் துறையினா் தடை விதித்தனா். இதனால் காவல் துறையினருக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நீண்ட நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன், திருப்புல்லாணி வழியாக வேலூா் இப்ராஹிம் ஏா்வாடிக்குச் சென்றார். அவருடன் பாஜக மாநில இளைஞரணிச் செயலா் ஆத்மகார்த்தி மற்றும் அஜ்மல் உள்ளிட்டோர் சென்றனா்.

ஆனால், அவா் தா்ஹாவுக்குள் வரக்கூடாது என ஏராளமானோர் சாலையில் எதிர்ப்பு தெரிவித்து, முழக்கங்களை எழுப்பினா்.


இதனிடையே, அப்பகுதியை சேர்ந்த பாஜகவினா் இப்ராஹிமுக்கு வரவேற்பளிக்க முயன்றனா். பிரச்சனை பெரிதாவதை தடுக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியினரை போலீஸார் தடுத்து நிறுத்தினா். பின்னா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தா்ஹாவுக்குள் சென்ற வேலூா் இப்ராஹிம், அங்கு தொழுகை நடத்தினார். பின்னா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவா் ராமநாதபுரம் திரும்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *