ஊரடங்கு காலத்தில் அனைத்துக் கடைகளும் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தன. தற்போது கடைகள் இரவு 10 மணி வரை செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே, ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நான்கு மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, தியேட்டர்களில் நேற்று இருக்கைகள், டிக்கெட் கவுண்ட்டர் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட தூய்மை பணிகள் மும்முரமாக நடந்தன.
அதேபோல பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், நீச்சல் குளங்கள் தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் பார்கள் போன்றவையும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. இதையொட்டி நேற்று முழுவதும் மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் முழுவீச்சில் நடந்தன.
இதுவரை கடற்கரைகளில் நடைபயிற்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழு அனுமதி தரப்பட்டிருக்கிறது. இதையொட்டி கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த கடற்கரைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன.
நான்கு மாத காலத்துக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்படுவதால் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பூங்காக்கள், கடற்கரைகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளதால் பொதுமக்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.