சட்டமன்ற நேரலை ஒளிபரப்பை நாளை முதலாவது தொடங்க தமிழக முதல்வர் ஆவன செய்யவேண்டும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலின்போது சட்டமன்ற கூட்டத்தொடர் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும் என தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. தமிழக சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. சார்பில் ஏராளமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை, சட்டமன்ற கூட்டம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு போன்றவை முக்கியமானதாகும்.
தற்போது சட்டசமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டரில் ‘‘பட்ஜெட் மீதான முழு விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மானியக்கோரிக்கை விவாதம் துவங்கப்போகிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, சட்டமன்ற நேரலை ஒளிபரப்பை நாளை முதலாவது தொடங்க தமிழக முதல்வர் ஆவன செய்யவேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.