செக் மோசடி வழக்கில் ஓர் ஆண்டு சிறை – மோசடி செய்த 9 லட்ச ரூபாயை ஒரு மாதத்தில் செலுத்த நீதிபதி தீர்ப்பளித்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டு அண்ணா நகரைச் சேர்ந்த பால்ச்சாமி ஆசிரியர் மகன் இந்திரஜித் பிரபாகரன் (38 ) என்பவர், வி.கள்ளபட்டியைச் சேர்ந்த அய்யர்த்தேவர் மகன் முத்தையா என்பவரிடம் பால்பண்ணை வைக்க போவதாக 9 லட்சம் பெற்றுக் கொண்டு பணத்தைத் தராமல் 4 ஆண்டுகளாக இழுத்தடித்த பின் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 லட்சத்திற்கும் வங்கி காசோலை வழங்கிய நிலையில் வங்கியில் பணம் இல்லை என தெரிய வர கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முத்தையா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று உசிலம்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி மகாராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி மகாராஜன் செக் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்திரஜித் பிரபாகரனுக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், 9 லட்ச ரூபாயை 6 மாத காலத்தில் திருப்பி செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.